பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : ரிஷப் பந்த் இடத்தை நிரப்பப்போவது யார்?
வியாழக்கிழமை (பிப்ரவரி 9) நாக்பூரில் தொடங்கும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் வழக்கமான விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், 2022 டிசம்பரில் ஒரு கார் விபத்தில் சிக்கினார். இதனால் அவர் தற்போது சிகிச்சையில் இருப்பதால், சில காலம் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ரிஷப் பந்திற்கு பதிலாக முதல் டெஸ்டில் இஷான் கிஷன் அல்லது கே.எஸ்.பாரத் இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாக உள்ளனர். பாரத் டெஸ்ட் போட்டிகளில் பந்தின் மாற்று வீரராக சில காலமாக இருந்தபோதிலும், கிஷனின் பவர்-ஹிட்டிங் திறன் பாரத்தின் வாய்ப்பை மழுங்கடிக்க செய்கிறது.
இஷான் கிஷன் vs கே.எஸ்.பாரத் : முதல்தர கிரிக்கெட்டில் பெர்ஃபார்மான்ஸ்
இஷான் கிஷன் டிசம்பர் 2014 இல் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். 24 வயதான அவர், இதுவரை 48 ஆட்டங்களில் 2,985 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். பாரத் சில காலமாக டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மாற்று கீப்பராக இருந்து வருகிறார். 28 வயதான அவர் முதல்தர கிரிக்கெட்டில் இதுவரை 86 போட்டிகளில் 4,707 ரன்கள் குவித்துள்ளார். இந்தியாவின் மிகச்சிறந்த கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் பாரத், முதல்தர கிரிக்கெட்டில் 331 ஆட்டமிழப்புகளை (கேட்சுகள் + ஸ்டம்பிங்) செய்துள்ளார். மறுபுறம், கிஷன் கீப்பராக 110 ஆட்டமிழப்புகளை மட்டுமே செய்துள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் வலிமையான விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பந்த்தின் இடத்தை நிரப்பப்போவது யார் என்பது தான் இப்போது கிரிக்கெட் ஆர்வலர்கள் அனைவரின் கேள்வியாகவும் உள்ளது.