மே மாதத்திற்கான ஐசிசி சிறந்த மாதாந்திர வீரர், வீராங்கனை விருது அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
அயர்லாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்டர் ஹாரி டெக்டர் ஐசிசியின் மே மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார்.
வங்கதேசத்தின் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோரும் இந்த போட்டியில் இருந்த நிலையில், இறுதியில் ஹாரி டெக்டருக்கு விருது கிடைத்துள்ளது.
இதன் மூலம் ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர் விருது பெறும் முதல் அயர்லாந்து வீரர் என்ற பெருமையை ஹாரி டெக்டர் பெற்றுள்ளார்.
விருது பெற்று குறித்து பேசிய டெக்டர், "விருது கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது அயர்லாந்து அணியின் செயல்திறன் மற்றும் முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. அர்ப்பணிப்புள்ள பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் ஆதரவு இல்லாமல், என்னால் இந்த விருதை வென்றிருக்க முடியாது." என்று கூறியுள்ளார்.
icc best women player
தாய்லாந்து வீராங்கனைக்கு மகளிர் பிரிவில் சிறந்த வீராங்கனை விருது
மகளிர் பிரிவில் ஐசிசியின் மே மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு தாய்லாந்தின் இளம் வீராங்கனை திபாட்சா புத்தாவோங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம், கடந்த ஏப்ரல் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை தாய்லாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் நருமோல் சாய்வாய் பெற்ற நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக தாய்லாந்து வீராங்கனைக்கு விருது கிடைத்துள்ளது.
மகளிர் பிரிவில் இலங்கையின் சாமரி அதபத்து மற்றும் ஹர்ஷிதா மாதவி ஆகியோரும் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவர்களை பின்னுக்குத் தள்ளி திபாட்சா விருதை கைப்பற்றியுள்ளார்.
"இந்த மாதத்தின் ஐசிசி மகளிர் வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வளர்ச்சிக்கு உதவிய தாய்லாந்தின் கிரிக்கெட் சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என திபாட்சா கூறியுள்ளார்.