டி20 கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரலாற்று வெற்றியை பதிவு செய்து அயர்லாந்து சாதனை
அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான போட்டியில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக அயர்லாந்து கிரிக்கெட் அணி தனது முதல் டி20 கிரிக்கெட் வெற்றியை பெற்றுள்ளது. அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரண்டு டி20 மற்றும் மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகின்றன. இதில் முதல் டி20 போட்டி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 27) நடைபெற்ற நிலையில், அதில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளும் இரண்டாவது டி20 போட்டியில் மோதின.
அடேர் சகோதர்களின் அபார ஆட்டத்தால் அயர்லாந்து வெற்றி
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ததை அடுத்து, அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டிர்லிங் மற்றும் ரோஸ் அடேர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பால் ஸ்டிர்லிங் 52 ரன்கள் சேர்த்த நிலையில், ரோஸ் அடேர் 100 ரன்கள் குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்காவை, ரோஸ் அடேரின் சகோதரர் மார்க் அடேர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடையச் செய்தார். அடேர் சகோதரர்களின் அபார ஆட்டத்தால் அயர்லாந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதல் டி20 கிரிக்கெட் வெற்றியை பதிவு செய்ததோடு, தொடரையும் 1-1 என சமன் செய்தது.