சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி; எம்எஸ் தோனிக்காக ஐபிஎல் நிர்வாகம் செய்த அதிரடி மாற்றம்
இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) ஆளும் கவுன்சில், 2025ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்திற்கு முன்னதாக தக்கவைப்பு விதிகளை உறுதிப்படுத்தியது. ஆறு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள அணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களில் ஒருவர் அன்கேப்ட் வீரராக இருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2008இல் கொண்டுவரப்பட்ட ஒரு விதி, ஓய்வு பெற்ற அல்லது இந்தியாவின் ப்ளேயிங் லெவன் அணியில் இடம் பெறாத அல்லது கடந்த ஐந்து ஆண்டுகளாக பிசிசிஐ ஒப்பந்தம் இல்லாத இந்திய வீரர்களை ஒரு அன்கேப்ட் வீரராக விளையாட அனுமதிக்கிறது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் ஜாம்பவான் எம்எஸ் தோனி இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எம்எஸ் தோனிக்காக மீண்டும் இந்த விதி சேர்க்கப்பட்டதா?
சுவாரஸ்யமாக, 2008இல் கொண்டுவரப்பட்ட அந்த விதி 2021இல் ஐபிஎல்லில் இருந்து அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டது. சிஎஸ்கே அணியில் எம்எஸ் தோனி ஐபிஎல் 2025 சீசனில் இருப்பாரா மாட்டாரா என்பது தொடர்ந்து கேள்விக்குறியாக இருந்த நிலையில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் இடம்பெற முடியாமால் போனால் களத்தில் விளையாட மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அவர் விளையாடுவதை உறுதி செய்யும் விதமாகவே இந்த விதி தற்போது மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எப்படியிருப்பினும், சிஎஸ்கே தங்கள் முன்னாள் கேப்டனைத் தக்க வைத்துக் கொள்ள விரும்பினால் இந்த விதியின் மூலம் செய்துகொள்ள முடியும்.
எம்எஸ் தோனியின் ஊதியம் குறைக்கப்பட வாய்ப்பு
எம்எஸ் தோனி ஆகஸ்ட் 15, 2020 அன்று அதிகாரப்பூர்வமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் ஜூலை 9, 2019 அன்று நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பையின் அரையிறுதியில் இந்தியாவுக்காக தனது கடைசி ஆட்டத்தில் விளையாடினார். இதனால், ஐபிஎல் 2025 தொடங்கும் நேரத்தில், தோனி இந்தியாவுக்காக தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடி ஐந்து ஆண்டுகள் எட்டு மாதங்கள் இருக்கும். இதனால், சிஎஸ்கே அவரைத் தக்கவைத்துக் கொண்டால், அன்கேப்ட் வீரராக விளையாடுவதற்குத் தகுதி பெறுகிறார். ஐபிஎல் 2021 மெகா ஏலத்திற்கு முன்னதாக தோனி ரூ.12 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். தற்போது தக்கவைக்கப்படும் அன்கேப்ட் வீரருக்கு அதிகபட்சம் ரூ.4 கோடி மட்டுமே கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளதால், அவரது ஊதியம் வெகுவாக குறையும்.