ஐபிஎல் 2026: ஷ்ரேயாஸ் ஐயர் சதம்; லக்னோவை வீழ்த்தி பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது பஞ்சாப் கிங்ஸ்
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 தொடரின் மிக முக்கியமான லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணி பிளே-ஆஃப் சுற்றுக்கான தங்களின் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தொடர்ச்சியாக 6 தோல்விகளைச் சந்தித்த பிறகு, ஏகானா மைதானத்தில் வாழ்வா-சாவா என்ற இக்கட்டான சூழ்நிலையுடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு, அதன் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அசாத்தியமான ஒரு சதம் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளார். கூடுதல் விபரங்கள் இங்கே:-
லக்னோ பேட்டிங்
லக்னோ அணியின் பேட்டிங் மற்றும் இங்கிலிஸ் அதிரடி
முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு அர்ஷின் குல்கர்னி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோரின் விக்கெட்டுகள் ஆரம்பத்திலேயே விழுந்தாலும், ஜோஷ் இங்கிலிஸ் நிலைத்துநின்றார். அவருக்குப் பக்கபலமாக ஆடிய ஆயுஷ் பதோனி, வெறும் 18 பந்துகளில் 43 ரன்கள் குவித்து லக்னோவின் ரன் வேகத்தை அதிரடியாக உயர்த்தினார். பதோனியின் விக்கெட்டிற்குப் பிறகு பொறுப்பைத் தன் கையில் எடுத்த ஜோஷ் இங்கிலிஸ், 44 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். ஆட்டத்தின் இறுதி ஓவர்களில் அப்துல் சமத் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுக்க, லக்னோ அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் என்ற வலுவான இலக்கை நிர்ணயித்தது. பஞ்சாப் அணியில் யுஸ்வேந்திர சஹால் மற்றும் மார்கோ யான்சென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பார்ட்னர்ஷிப்
ஷ்ரேயாஸ் ஐயர் - பிரப்சிம்ரன் சிங் மாஸ் பார்ட்னர்ஷிப்
197 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த பஞ்சாப் அணிக்குத் தொடக்க வீரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கான்னோலி ஆகியோரின் விக்கெட்டுகளை முகமது ஷமி பவர்பிளேயிலேயே வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். ஆனால், அதன் பிறகு களம் புகுந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் லக்னோவின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் வெறும் 51 பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 101* ரன்கள் குவித்து அசத்தினார். மறுமுனையில் இவருக்கு ஈடுகொடுத்து விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பிரப்சிம்ரன் சிங், 39 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி, 12 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே பஞ்சாப் அணியை இலக்கை எட்ட வைத்தது.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப் பட்டியலில் பஞ்சாபின் தற்போதைய நிலை
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு அதிகாரப்பூர்வமாகத் தகுதி பெற வேண்டுமானால், ஞாயிற்றுக்கிழமை (மே 24) நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் வீழ்த்த வேண்டும். அதே நேரத்தில் கேகேஆர் அணி தனது போட்டியில் வெல்லும்பட்சத்தில், அந்த அணியின் நெட் ரன் ரேட்டை விடப் பஞ்சாப் சிறந்த நிலையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.