LOADING...
ஐபிஎல் 2026: 254 ரன்கள் குவித்து சாதனை! லக்னோவை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்தில் பஞ்சாப் கிங்ஸ்
லக்னோவை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்தில் பஞ்சாப் கிங்ஸ்

ஐபிஎல் 2026: 254 ரன்கள் குவித்து சாதனை! லக்னோவை வீழ்த்தி அசைக்க முடியாத பலத்தில் பஞ்சாப் கிங்ஸ்

எழுதியவர் Sekar Chinnappan
Apr 20, 2026
07:01 am

செய்தி முன்னோட்டம்

முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026ன் 29வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணியை எதிர்கொண்ட பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்), 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தனது வெற்றிநடையைத் தொடர்ந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, இந்த சீசனின் அதிகபட்ச ஸ்கோரான 254/7 ரன்களைக் குவித்து லக்னோவிற்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது. லக்னோ அணி ரிஷப் பண்ட் மற்றும் மிட்செல் மார்ஷ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் பதிலடி கொடுக்க முயன்றாலும், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 200/5 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வியடைந்தது.

ரன் மழை

பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கானொல்லியின் ரன் மழை

பஞ்சாப் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது பிரியான்ஷ் ஆர்யா மற்றும் கூப்பர் கானொல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க பார்ட்னர்ஷிப் ஆகும். இவர்கள் இருவரும் இணைந்து 80 பந்துகளில் 182 ரன்களைக் குவித்து, ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணிக்கான மூன்றாவது மிகச்சிறந்த பார்ட்னர்ஷிப் சாதனையைப் படைத்தனர். பிரியான்ஷ் ஆர்யா 37 பந்துகளில் 93 ரன்களும் (4 பவுண்டரிகள், 9 சிக்ஸர்கள்), கூப்பர் கானொல்லி 46 பந்துகளில் 87 ரன்களும் (8 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தனர். இந்த அதிரடி ஆட்டம் பஞ்சாப் அணியை 250 ரன்களைக் கடக்க உதவியது. இது பஞ்சாப் அணியின் ஐபிஎல் வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோராகப் பதிவாகியுள்ளது.

லக்னோ அணி

லக்னோ அணியின் வீழ்ச்சி

255 ரன்கள் என்ற மலைபோன்ற இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு, இளம் வீரர் ஆயுஷ் படோனி (35) மற்றும் மிட்செல் மார்ஷ் தொடக்கம் கொடுத்தனர். ரிஷப் பண்ட் 23 பந்துகளில் 43 ரன்களும், மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடியும், பஞ்சாப் பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். பஞ்சாப் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, லக்னோவின் ரன் வேட்டையை ஆரம்பத்திலிருந்தே முறியடித்தது.

Advertisement

புள்ளிப்பட்டியல்

புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸின் ஆதிக்கம்

இந்த வெற்றியின் மூலம், பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றுகூட தோல்வியடையாமல், முதலிடத்தில் நீடிக்கிறது (ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது). +1.420 என்ற வலுவான நெட் ரன் ரேட்டுடன், லீக் சுற்றில் மிகச்சிறந்த அணியாகத் திகழ்கிறது. மறுபுறம், லக்னோ அணி 8 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மட்டுமே பெற்று, 8வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

Advertisement