ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சன் அதிரடி சதம்! டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் வெற்றி
செய்தி முன்னோட்டம்
ஐபிஎல் 2026 சீசனின் விறுவிறுப்பான லீக் ஆட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), சஞ்சு சாம்சனின் அசாத்திய சதத்தால் அபார வெற்றி பெற்றது. தொடர்ச்சியான மூன்று தோல்விகளுக்குப் பிறகு, தனது சொந்த மண்ணில் களம் கண்ட சிஎஸ்கே, இந்தப் போட்டியில் 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. சஞ்சு சாம்சன் வெறும் 56 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 115 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் இந்த சீசனின் முதல் சதத்தைப் பதிவு செய்த வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
வலுவான பார்ட்னர்ஷிப்
ஆயுஷ் மாத்ரே மற்றும் சாம்சனின் வலுவான பார்ட்னர்ஷிப்
தொடக்க வீரராகக் களம் இறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (18) உடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த சாம்சன், பின்னர் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 113 ரன்களை சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஆயுஷ் மாத்ரே 36 பந்துகளில் 59 ரன்கள் (3 பவுண்டரிகள், 4 சிக்சர்கள்) எடுத்திருந்த போது, ரன் வேகத்தை உயர்த்தும் நோக்கில் 18வது ஓவரில் 'ரிட்டயர்ட் அவுட்' முறையில் வெளியேறினார். அவருக்குப் பின் வந்த ஷிவம் துபே 20 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே வலுவான இலக்கை நிர்ணயித்தது.
சாதனைகள்
புள்ளிவிவரங்களில் சஞ்சு சாம்சனின் சாதனைகள்
சஞ்சு சாம்சன் இந்தப் போட்டியின் மூலம் ஐபிஎல் வரலாற்றில் தனது 4வது சதத்தைப் பதிவு செய்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 400 சிக்சர்கள் மற்றும் 8,500 ரன்களைக் கடந்த 4வது இந்திய வீரர் (ரோஹித், விராட், சூர்யகுமாருக்குப் பிறகு) என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் சதம் அடித்த 8வது வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். டெல்லி அணிக்கு எதிராக 533 ரன்களைக் கடந்துள்ள அவர், அந்த அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஜாஸ் பட்லர் மற்றும் கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ்
டெல்லி கேப்பிடல்ஸின் போராட்டமும் ஜேமி ஓவர்டனின் பந்துவீச்சும்
213 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பயணித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு நிசங்கா (41) மற்றும் கே.எல்.ராகுல் (18) ஜோடி 61 ரன்கள் சேர்த்து நல்ல தொடக்கத்தை அளித்தது. இருப்பினும், சிஎஸ்கே வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் தனது அதிரடி பந்துவீச்சால் டெல்லி அணியைச் நிலைகுலைய செய்தார். அவர் 4 ஓவர்களில் வெறும் 18 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெல்லி தரப்பில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 பந்துகளில் 60 ரன்கள் குவித்து இறுதிவரைப் போராடினார். இருப்பினும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் டெல்லி அணி 20 ஓவர்களில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
புள்ளிப்பட்டியல்
புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கேவின் முன்னேற்றம்
சிஎஸ்கே தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஓவர்டனுக்குத் துணையாக நின்றார். இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திலிருந்து (10வது) 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே ஒரு வெற்றி மற்றும் மூன்று தோல்விகளுடன் உள்ளது. மறுபுறம், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. சஞ்சு சாம்சனின் இந்த மீண்டெழுந்த ஆட்டம் சிஎஸ்கே ரசிகர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.