LOADING...
ஐபிஎல் வர்ணனையில் மோதல்: அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்! ரசிகர்கள் கண்டனம்!
ஐபிஎல் வர்ணனையில் அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்

ஐபிஎல் வர்ணனையில் மோதல்: அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் தாக்கிய சேவாக்! ரசிகர்கள் கண்டனம்!

எழுதியவர் Vasuki Ravichandran
Mar 29, 2026
08:44 pm

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தின் போது, வர்ணனையாளர்களாகக் களம் இறங்கிய முன்னாள் வீரர்கள் வீரேந்திர சேவாக் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இடையே ஏற்பட்ட நேரடி விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வர்ணனையின் போது அஸ்வினைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்த சேவாக் மீது கிரிக்கெட் ரசிகர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற பெங்களூரு (RCB) மற்றும் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

நேரலையில் நடந்தது என்ன?

தொடர்ந்த வார்த்தை போர்:

ஜியோ ஸ்டார் தளத்தில் வர்ணனையாளராக அறிமுகமான அஸ்வினுக்கும், சேவாக்கிற்கும் இடையே ஆரம்பத்தில் கலகலப்பாகத் தொடங்கிய உரையாடல், சிறிது நேரத்திலேயே கசப்பாக மாறியது. போட்டியின் போக்கை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, சேவாக் தனது தனிப்பட்ட கதைகளைக் கூறத் தொடங்கினார். ஒரு கடடத்தில் அஸ்வினைப் பார்த்து, "வர்ணனை செய்யும்போது உனது மூளையைச் சற்று குறைவாகப் பயன்படுத்து" எனக் கூறியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்குப் பதிலளித்த அஸ்வின், "பேசுவதற்கு முன் யோசிக்க வேண்டும் என்று பெற்றோர் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ளனர். நீங்கள் அதற்கு நேர்மாறாகச் செய்யச் சொல்கிறீர்கள்" என்று தனது பாணியில் பதிலடி கொடுத்தார். இதையும் விடாத சேவாக், அஸ்வினின் யூடியூப், இன்ஸ்டாகிராம் பக்கங்களைக் குறிவைத்து, சிலர் அதிக ஃபாலோயர்களைப் பெறுவதற்காகப் பார்த்துப் பேசுவார்கள்" என்று நேரடியாகச் சாடினார்.

ஐபிஎல் வர்ணனையில் மோதல்:

ரசிகர்கள் கடும் அதிருப்தி! 

இந்த விவாதத்தால் நேரலையில் சிறிது நேரம் ஒருவிதமான அமைதி நிலவியது. வர்ணனையில் தரமான கிரிக்கெட் நுணுக்கங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு, வீரர்களின் இத்தகைய தனிப்பட்ட கேலி கிண்டல்கள் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன. ஏற்கனவே ஆகாஷ் சோப்ரா மற்றும் நவ்ஜோத் சிங் சித்து போன்ற வர்ணனையாளர்கள் மீது விமர்சனங்கள் இருந்து வரும் நிலையில், சேவாக்கின் இந்தச் செயல் வர்ணனையின் தரத்தைக் குறைப்பதாகப் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கிரிக்கெட் என்பது அறிவார்ந்த விளையாட்டு என்றும், அதில் லாஜிக் இல்லாமல் பேசுவதை ஏற்க முடியாது என்றும் அஸ்வினின் ஆதரவாளர்கள் சேவாக்கைக் கண்டித்து வருகின்றனர்.

Advertisement