அதெல்லாம் வெறும் வதந்தி; விராட் கோலி கேப்டன்சி குறித்த தகவல்களை நிராகரித்தது ஆர்சிபி
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனுக்கான அணியின் கேப்டனாக விராட் கோலி திரும்புவார் என்ற வதந்திகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) நிர்வாகம் நிராகரித்துள்ளது. 2021இல் விராட் கோலி கேப்டன்சி பதவியிலிருந்து விலகிய பிறகு மூன்று சீசன்களுக்கு கேப்டனாக இருந்த ஃபாஃப் டு பிளெசிஸை, ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்னதாக, ஆர்சிபி விடுவித்தது. இதனால், விராட் கோலி மீண்டும் கேப்டன்சி பொறுப்பை ஏற்பார் என்ற வதந்தி பரவத் தொடங்கியது. இந்நிலையில், ஆர்சிபி அணியின் கிரிக்கெட் இயக்குனர் மோ போபாட், ஜியோசினிமாவுக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில் வதந்திகள் பற்றி பேசினார். விராட் கோலி மீண்டும் கேப்டனாக திரும்புவது குறித்த கேள்விக்கு, அது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
விராட் கோலியின் ஆர்வம் மற்றும் தக்கவைப்பு விவரங்கள்
ஃபாஃப் டு பிளெசிஸை தக்கவைக்காமல் போனதால், ஐபிஎல் 2025இல் யார் அணியை வழிநடத்துவது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. விராட் கோலி தனது கேப்டன் பதவியை திரும்பப் பெற ஆர்வமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அதை உறுதிப்படுத்தவில்லை. சமீபத்திய தக்கவைப்பு அறிவிப்புகளில், ₹21 கோடியில் தக்கவைக்கப்பட்ட இந்திய வீரர் விராட் கோலி தக்கவைப்பு பட்டியலில் அதிக தொகையைப் பெற்றுள்ளார். ஆர்சிபி மேலும் ரஜத் படிதார் (₹11 கோடி) மற்றும் யாஷ் தயாள் (₹5 கோடி) ஆகியோரையும் தக்கவைத்துள்ள நிலையில், ஐபிஎல் 2025க்கான ஏலப் பணத்தில் ₹83 கோடி மீதம் வைத்துள்ளது.