
விளையாட்டை விட பாதுகாப்புதான் முக்கியம்; ஐபிஎல் 2025 தொடர் ரத்து செய்யப்படலாம் என தகவல்
செய்தி முன்னோட்டம்
தரம்சாலாவில் வியாழக்கிழமை (மே 8) பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) இடையேயான போட்டி பாதியில் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஐபிஎல் 2025 சீசன் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில், அருகிலுள்ள ஜம்மு மற்றும் பதான்கோட்டில் விமானத் தாக்குதல் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து தரம்சாலா போட்டியை ரத்து செய்யும் முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், மீதமுள்ள போட்டிகளின் எதிர்காலத்தை மதிப்பிடுவதற்கு உயர்மட்டக் கூட்டம் நடத்தப்படும் என்பதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாக, ஸ்போர்ட்ஸ் நவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முடிவு
விவாதித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிப்பு
"தற்போதைக்கு எதுவும் இறுதியானது அல்ல. நிலைமை தினமும் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நாளை அதை மதிப்பாய்வு செய்வோம்," என்று ராஜீவ் சுக்லா கூறினார்.
மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த உத்தரவும் இல்லாத நிலையில், வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க பிசிசிஐ விரைவாக செயல்பட்டது.
உனா ரயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு அணிகளை அழைத்துச் செல்ல சிறப்பு வந்தே பாரத் ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்முவில் விமானத் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததாலும், வெடிப்பு போன்ற சத்தங்கள் கேட்டதாலும் பதான்கோட், அமிர்தசரஸ், ஜலந்தர், ஹோஷியார்பூர், மொஹாலி மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் பரவலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
வெளிநாட்டு வீரர்கள்
வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்ப கோரிக்கை
இதற்கிடையே, ஐபிஎல்லில் விளையாடி வரும் வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கள் தாய்நாடு திரும்புவதற்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தி உள்ளனர்.
ஐபிஎல்லில் வீரர்கள் மட்டுமல்லாது, பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் என பல வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், தற்போதைய இந்தியா பாகிஸ்தான் பதற்றத்தால், அவர்கள் பலரும் நாடு திரும்ப விரும்புகின்றனர்.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, வீரர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை மிகவும் பாதுகாப்பான இடங்களில் பிசிசிஐ தங்கவைத்துள்ளது.
இதையடுத்து, விரைவில் போட்டி ஐபிஎல் 2025 செய்யப்பட்டு வீரர்கள் திருப்பி அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.