
ஐபிஎல் 2025இல் முதல் தோல்வியுடன் மோசமான சாதனையா? டெல்லி கேப்பிடல்ஸுக்கு வந்த சோகத்தை பாருங்க
செய்தி முன்னோட்டம்
ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 13) டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடந்த மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (டிசி) அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இது ஐபிஎல் 2025 சீசனில் அவர்களின் முதல் தோல்வியாகும். கருண் நாயர் தலைமையிலான வலுவான சேசிங் இருந்தபோதிலும், டிசியின் தாமதமான சரிவு எம்ஐ அணிக்கு வியத்தகு வெற்றியை அளித்தது மற்றும் டிசியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதற்கிடையே, இந்த தோல்வியுடன், டிசி அணி ஐபிஎல் வரலாற்றில் படைக்கப்பட்ட ஒரு மோசமான சாதனையை சமன் செய்துள்ளது.
அதாவது ஐபிஎல் வரலாற்றில் அதிக உள்ளூர் தோல்விகளை பெற்ற இரண்டு அணிகளில் ஒன்றாக டெல்லி கேப்பிடல்ஸ் தற்போது மாறியுள்ளது.
தோல்விகள்
உள்ளூர் மைதானத்தில் எத்தனை தோல்விகள்?
டெல்லி கேப்பிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தோல்வியின் மூலம், தற்போது தங்கள் சொந்த மைதானத்தில் 45 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
முன்னதாக, பெங்களூரில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் 45 தோல்விகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி பதிவு செய்துள்ள நிலையில், அதை தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் சமன் செய்துள்ளது.
இந்த இரு அணிகளைத் தவிர கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ஈடன் கார்டன்ஸில் 38 தோல்விகள்) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (வான்கடே ஸ்டேடியத்தில் 34 தோல்விகள்) ஆகியவை சொந்த மண்ணில் குறிப்பிடத்தக்க தோல்விகளைச் சந்தித்த மற்ற அணிகளாக முன்னணியில் உள்ளன.