ஐபிஎல் 2023 : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்! அப்போ ரோஹித் சர்மா நிலை?
ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா விளையாடாத போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகள் அடுத்தடுத்தடுத்து வர உள்ளன. இதனால் இந்திய வீரர்களின் வேலைப்பளுவை சரியாக கையாளும் வகையில், ஐபிஎல்லில் அவர்களுக்கு சில போட்டிகளில் ஓய்வளிக்க பிசிசிஐ அணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சில போட்டிகளில் ஓய்வு வழங்கப்படும் என தெரிகிறது. இத்தகைய சமயங்களில் அணியை வழிநடத்தும் பொறுப்பு சூர்யகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இதனால் பின்னடைவா?
முதுகு அறுவை சிகிச்சை காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, ஐபிஎல் 2023 தொடரிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே பின்னடைவை எதிர்கொண்டு உள்ளது. இந்நிலையில் தற்போது ரோஹித் சர்மாவும் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்படும் நிலையில், இது மும்பை இந்தியன்ஸ் அணியில் எவ்வாறு தாக்கம் செலுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஐபிஎல்லில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் இருந்தாலும், 2022 ஐபிஎல் தொடரில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பரிதாபமாக வெளியேறியது குறிப்பிடத்தக்கது.