"ஏ சாலா கப் நமதே" : இந்த முறையாவது ஐபிஎல் கோப்பை வெல்லுமா ஆர்சிபி?
2023 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) முதல் பட்டத்திற்கான வேட்டையை மீண்டும் தொடங்க உள்ளது. பல முக்கிய வீரர்கள் இடம்பெற்ற அணியாக இருந்தபோதிலும், ஆர்சிபியால் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல் 2023க்கான கடந்த டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் ஆர்சிபி பெரிய அளவில் மாற்றங்களை செய்யவில்லை. இங்கிலாந்தை சேர்ந்த ரீஸ் டோப்லி (ரூ. 1.9 கோடி) மற்றும் வில் ஜாக்ஸ் (ரூ. 3.2 கோடி) மட்டுமே ஆர்சிபியின் முக்கிய ஒப்பந்தங்களாக இருந்தது. இருப்பினும், வில் ஜாக்ஸ் காயம் காரணமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முழு செயல்திறன்
முந்தைய மூன்று சீசன்களில் பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்ற ஒரே அணி ஆர்சிபி மட்டுமே ஆகும். இருப்பினும், இந்த காலகட்டத்தில் அவர்களால் ஒரு முறை கூட இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியவில்லை. ஒட்டுமொத்தமாக, ஆர்சிபி மூன்று முறை (2009, 2011 மற்றும் 2016) இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. அவர்கள் 15 சீசன்களில் எட்டு முறை முதல் நான்கு இடங்களுக்குள் வந்துள்ளனர். மேலும் 2017 மற்றும் 2019 என இரண்டு முறை ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் "ஏ சாலா கப் நமதே" என ஆர்சிபியின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், இந்த முறையாவது அது நிஜமாக வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.