காலில் காயமடைந்த தோனி : முக்கிய அப்டேட் கொடுத்த சிஎஸ்கே பயிற்சியாளர் பிளெமிங்
ஐபிஎல் 2023 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்எஸ் தோனி முழங்காலில் காயம் இருப்பதை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார். புதன்கிழமை (ஏப்ரல் 12) ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின்போது, எம்எஸ் தோனியின் முழங்காலில் காயம் ஏற்பட்டதால் ரன் எடுக்க ஓடும்போது சிக்கலை எதிர்கொண்டார். இந்நிலையில் போட்டிக்கு பிந்தைய பேட்டியில் பிளெமிங், "தோனி முழங்கால் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய சில அசைவுகளில் நீங்கள் இதை பார்க்க முடியும். ஆனால் இன்றும் நாம் அவரின் சிறப்பான ஆட்டத்தை பார்த்தோம். அவரது உடற்தகுதி எப்போதும் மிகவும் தொழில்முறையுடன் இருக்கும்." என்று கூறினார்.
முழங்கால் காயத்துடனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எம்எஸ் தோனி
இந்த சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மூன்று இன்னிங்ஸ்களில் 214.81 ஸ்டிரைக் ரேட்டில் 6 சிக்ஸர்கள் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உட்பட 58 ரன்கள் எடுத்துள்ளார். முழங்காலில் காயம் இருந்தபோதிலும், தோனி இந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புதன்கிழமை, அவர் 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்கள் எடுத்தார். பயிற்சியின்போது நெட்டில் கூட, தோனி மிகவும் பிசியாக உள்ளார். தோனிக்கு காயம் இருந்தாலும் பெரிய அளவில் சிக்கல் இல்லை என்றும், அடுத்த போட்டிக்கு இன்னும் சில நாட்கள் இருப்பதால் அதற்கு முன்னர் தோனி முழுமையாக தயாராகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.