ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரும் பின்னடைவு!
ஐபிஎல் 2023 சீசன் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் முக்கிய வீரராக கருதப்படும் கைல் ஜேமிசன் விலகியுள்ளார். 2023 ஐபிஎல்லுக்கு முன்னதாக, 2022 டிசம்பரில் நடந்த மினி ஏலத்தில் பென் ஸ்டோக்ஸ், கைல் ஜேமிசன் மற்றும் பலரை சிஎஸ்கே பெற்றது. எனினும், ஐபிஎல் 2023 சீசனில் கைல் ஜேமிசன் விலகியுள்ளதால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு துறையில் பெரும் அடியை சந்தித்துள்ளது. ஜேமிசன் இந்த வாரம் தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். மேலும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. முன்னதாக, சிஎஸ்கேவால் 1 கோடி ரூபாய்க்கு மினி ஏலத்தில் அவர் வாங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கைல் ஜேமிசனுக்கு மாற்றாக களமிறக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள்
ஐபிஎல் 2021ல் பஞ்சாப் கிங்ஸிடமிருந்து பெரும் தொகையைப் பெற்ற ரிலே மெரிடித் கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். எனினும் ஐபிஎல் 2023 ஏலத்தில் அவரை யாரும் எடுக்கவில்லை. ஆனால் ஜேமிசன் விலகியுள்ளதால் சிஎஸ்கே அணியின் மூலம் மீண்டும் களமிறங்க வாய்ப்புள்ளது. ஜேமிசனுக்கு மாற்றாக பார்க்கப்படும் மற்றொரு வீரர் ஜெரால்ட் கோட்ஸி. சமீபத்தில் முடிவடைந்த எஸ்ஏ20ல் சென்னையின் இணை உரிமையான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக கோட்ஸி விளையாடினார். அவர் 9 ஆட்டங்களில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்த இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என சிஎஸ்கே வட்டாரங்களில் கூறப்படுகிறது.