ஐபிஎல் 2023 : ஒரு போட்டிக்கு எம்.எஸ்.தோனி வாங்கும் சம்பளம் எவ்ளோ தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்கியுள்ள நிலையில், இதில் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒருவர் ஆவார். ஐபிஎல் 2023 ஏலத்தின் போது அதிக விற்பனையான வீரர்களில் எம்எஸ் தோனியும் ஒருவர். ஐபிஎல் நட்சத்திர வீரரான எம்எஸ் தோனியை ரூ.12 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது. தோனியின் ஐபிஎல் போட்டிக் கட்டணம், முதலீடுகள் மற்றும் வணிகங்கள் உட்பட அவரது ஆண்டு வருமானம் ரூ.130 கோடிக்கு மேல் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அவரது ஆண்டு வருமானம் மற்ற வீரர்களுடன் ஒப்பிடும்போது இன்னும் உச்சத்திலேயே உள்ளது.
ஐபிஎல் 2023ல் எம்எஸ் தோனியின் ஒரு போட்டிக்கான சம்பளம்
ஐபிஎல்லில் ஒவ்வொரு அணியும் குறைந்தபட்சம் 14 போட்டிகளில் விளையாடுகின்றன. அதாவது ஐபிஎல் 2023ல் சிஎஸ்கே 14 போட்டிகளில் விளையாடினால், எம்எஸ் தோனியின் ஒரு போட்டிக்கான சம்பளம் ரூ.85.71 லட்சமாக இருக்கும். மேலும், ஐபிஎல்லின் கடந்த 15 சீசன்களில், சிஎஸ்கே அணி எம்எஸ் தோனியை தக்கவைத்துக் கொள்வதற்காக ரூ.176 கோடிக்கு மேல் செலுத்தியுள்ளது. மேலும், எம்.எஸ்.தோனியின் முதலீடுகள் மற்றும் வணிகங்களைக் கணக்கிடும் போது, அவரது மொத்த நிகர மதிப்பு ரூ.900 கோடிக்கு மேல் உள்ளது. இதற்கிடையே மார்ச் 31, 2023 அன்று முடிவடைந்த நிதியாண்டில் தோனி 38 கோடி ரூபாய் முன்பணமாக செலுத்தியதாக வருமான வரித்துறை தெரிவித்ததால், கடந்த நிதியாண்டில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்துபவராக எம்எஸ் தோனி உருவெடுத்துள்ளார்.