10 நாள் ரெஸ்ட்? சிஎஸ்கே அணிக்கு ஷாக் கொடுக்கும் பென் ஸ்டோக்ஸ்!
செய்தி முன்னோட்டம்
சென்னை சூப்பர் கிங்ஸ் தனது ஐபிஎல் 2023 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியுடன் தொடங்கினாலும், அடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 8) இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள உள்ளது.
இருப்பினும், ஆட்டத்திற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக 10 நாட்களுக்கு ஓய்வெடுக்க வேண்டியிருக்கும் எனக் கூறப்படுவதால் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மும்பை இந்தியன்சுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே பயிற்சி அமர்வைத் தொடர்ந்து ஸ்டோக்ஸ் குதிகால் வலியால் அவதிப்பட்டதாக தெரிகிறது.
பென் ஸ்டோக்ஸ்
அணியில் நீடிப்பாரா பென் ஸ்டோக்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ் மருத்துவக் குழு போட்டி தொடங்கும் முன்பு நிலைமையை மதிப்பிட்டு இறுதி முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே ஐபிஎல் 2023 இல் இதுவரை சிஎஸ்கே அணிக்காக இரண்டு போட்டிகளிலும் ஸ்டோக்ஸ் விளையாடி இருந்தாலும், எந்தவொரு போட்டியிலும் சொல்லிக்கொள்ளும்படி செயல்படவில்லை.
2023 ஐபிஎல் ஏலத்தில் ஸ்டோக்ஸை வாங்குவதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 16.25 கோடியை கொடுத்துள்ள நிலையில், ஐபிஎல் ஏல வரலாற்றில் மூன்றாவது விலையுயர்ந்த வீரர் ஆனார்.
தோனிக்கு பிறகு சிஎஸ்கேவை பென் ஸ்டோக்ஸ் வழிநடத்துவார் என ஐபிஎல் 2023 தொடங்கும் முன் பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தற்போது பென் ஸ்டோக்ஸ் அணியில் நீடிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.