ஐபிஎல் 2023 : டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக அபிஷேக் போரல் சேர்ப்பு
டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக பெங்கால் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் அபிஷேக் போரல் சேர்க்கப்பட்டுள்ளார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் புத்தாண்டை முன்னிட்டு 2022 டிசம்பர் இறுதியில் உத்தரகண்ட் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். அவரது காயங்கள் முழுமையாக குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால் தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய கேப்டனாக டேவிட் வார்னர் நியமிக்கப்பட்டார். மேலும் ரிஷப் பந்திற்கு பதிலாக விக்கெட் கீப்பிங் செய்வது யார் என்ற கேள்வி எழுந்தது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் யார்?
ரிஷப் பந்திற்கு பதிலாக மாற்று வீரராக அபிஷேக் போரல் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பெங்கால் அணியின் விக்கெட் கீப்பராக அனுபவம் கொண்டுள்ளதால், இவரையே விக்கெட் கீப்பராக பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அபிஷேக் போரல் கடந்த ஆண்டு இந்தியாவின் யு19 உலகக் கோப்பை வென்ற அணியில் ஒரு பகுதியாக இருந்தார். இதுவரை 16 முதல் தர, 3 லிஸ்ட் ஏ மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இதற்கிடையே டெல்லி அணியில் உள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பில் சால்ட்டுக்கு தான் தொடரில் விக்கெட் கீப்பிங் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்றும் சிலர் தெரிவிக்கின்றனர். போட்டி தொடங்கும்போது தான் யார் விக்கெட் கீப்பர் என்பது அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.