ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல்; ரஷ்யாவை இடைநீக்கம் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் விதிகளை மீறியதாகக் கூறி, ரஷ்யா ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) வியாழக்கிழமை (அக்டோபர் 12) இடைநீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு உக்ரைனில் உள்ள நான்கு பிராந்தியங்களில் உள்ள விளையாட்டு அமைப்புகளை இணைத்தது நாடுகளின் ஒருமைப்பாடு குறித்த ஒலிம்பிக் சாசனத்தை மீறிய செயல் என தெரிவித்துள்ளது. ஐஓசி செய்தித் தொடர்பாளர் மார்க் ஆடம்ஸ் கூறுகையில், ரஷ்ய ஒலிம்பிக் சங்கத்தின் நடவடிக்கை அக்டோபர் 5 ஆம் தேதி உக்ரேனிய ஒலிம்பிக் அமைப்பின் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறியது என்றார். மேலும், அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் ரஷ்ய விளையாட்டு வீரர்கள் நாடற்றவர்களாக போட்டியிடுவதற்கான வாய்ப்பை இந்த இடைநீக்கம் பாதிக்காது என்று ஆடம்ஸ் கூறினார்.