சச்சின் டெண்டுல்கரின் ஆட்டத்தை டிவியில் பார்த்து கிரிக்கெட் கற்ற வீரர்; ரஞ்சி கோப்பையில் சதம் அடித்து அசத்தல்
சச்சின் டெண்டுல்கர் 2011 ஒருநாள் உலகக் கோப்பையை உயர்த்தியதை பார்த்த ஒரு தந்தையின் ஆர்வம், அவரது மகனை தற்போது ரஞ்சி கோப்பையில் சதமடிக்க வைத்துள்ளது. சச்சின் டெண்டுல்கரின் ரசிகரான ஷஷி காந்த் என்பவருக்கு, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த 2011 ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சச்சின் டெண்டுல்கர் கோப்பையை ஏந்தியது உணர்வுப்பூர்வமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தனது மகனான ஆயுஷ் பாண்டேவையும் அதேபோல் வளர்த்தெடுக்க ஷஷி காந்த் உறுதி பூண்டார். எனினும், சத்தீஸ்கரில் அவர் வசித்த பகுதியில் மகனுக்கு முறையான கிரிக்கெட் பயிற்சி கொடுக்க முடியாத சூழலில், தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கர் மைதானத்தில் விளையாடுவதை காட்டி அதன் மூலம் கற்றுக் கொள்ள வைத்துள்ளார்.
ரஞ்சி கோப்பையில் சத்தீஸ்கர் அணிக்காக விளையாடும் ஆயுஷ் பாண்டே
தொலைக்காட்சியில் சச்சின் டெண்டுல்கரின் நுட்பத்தையும், ஒழுக்கத்தையும் பார்த்து வளர்ந்த ஷஷி காந்த் மகன் ஆயுஷ் பாண்டே, தற்போது வளர்ந்து ரஞ்சி கோப்பையில் சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் அணியில் இளம் வீரர்களில் ஒருவராக விளையாடி வருகிறார். 2022இல் சத்தீஸ்கர் அணியில் அறிமுகமானாலும், அப்போது குறைந்த ஸ்கோர் மட்டுமே அடித்து மோசமான செயல்திறனை வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இந்த சீசனில் தற்போது கோவையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய 21 வயது ஆயுஷ் பாண்டே, முதல் இன்னிங்ஸில் 184 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார்.
ஆயுஷ் பாண்டே பேட்டி
இதுகுறித்து அவர் அளித்த ஒரு பேட்டியில், ஆரம்பத்தில் தொலைக்காட்சியில் போட்டியைப் பார்த்து கற்றுக் கொள்வதில் சிரமத்தை எதிர்கொண்டதாகக் கூறினார். எனினும், கிரிக்கெட்டில் அதுதான் தனது தொடக்கப் புள்ளி என்று கூறிய ஆயுஷ் பாண்டே, பின்னர் தனது தந்தை தன்னை அவரது கேரேஜிற்கு அழைத்துச் சென்று அண்டர்ஆர்ம் பந்துவீச்சில் பயிற்சி கொடுத்ததாகத் தெரிவித்தார். முறையான கிரிக்கெட் பயிற்சியில் சேருவதற்கு முன் இதுவே தனது தினசரி வழக்கமாக இருந்ததாகக் கூறிய ஆயுஷ் பாண்டே, இதுவே தனக்கு விளையாட்டில் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த சீசனில் இதுவரை 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஆயுஷ் பாண்டே, அவற்றில் மூன்றில் 50+ ஸ்கோரை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.