INDvsWI 4வது டி20 : யஷஸ்வி - கில் ஜோடி அபாரம்; 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
புளோரிடாவில் நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என சமன் செய்தது. தொடரின் முதல் மூன்று போட்டிகள் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற நிலையில், நான்காவது போட்டி அமெரிக்காவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷிம்ரோன் ஹெட்மயர் அரைசதம் கடந்து 61 ரன்களும், சாய் ஹோப் 45 ரன்களும் எடுத்தனர். மறுபுறம் இந்திய அணியில் சிறப்பாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ஷுப்மன் கில் பார்ட்னர்ஷிப் அபாரம்
179 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மன் கில் ஆகிய இருவரும் ஆரம்பம் முதல்வே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஷுப்மன் கில் 47 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 17 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கிடையே, யஷஸ்வி மற்றும் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்ததன் மூலம், டி20 போட்டிகளில் இந்தியாவிற்கான இரண்டாவது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை பதிவு செய்துள்ளது.