INDvsSL : வான்கடே மைதானம் இந்தியாவுக்கு சாதகமா பாதகமா? கடந்த கால புள்ளிவிவரங்கள்
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் வியாழக்கிழமை (நவம்பர் 2) மும்பை வான்கடே மைதானத்தில் இலங்கையை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொள்கிறது. போட்டிக்கு முன்னதாக வான்கடே ஸ்டேடியத்தின் புள்ளிவிவரங்களை இதில் பார்க்கலாம். 36 ஆண்டுகளில் (1987-2023) வான்கடே மைதானத்தில் இதுவரை மொத்தம் 25 ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டுள்ளன. இந்தப் போட்டிகளில், சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 256 ஆகும். இந்த 25 ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 13ல் வெற்றி பெற்றுள்ளன. 2015இல் இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா எடுத்த 438/4 என்பது இங்கு பதிவான அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மாறாக, 1998இல் இந்தியாவுக்கு எதிராக வங்கதேசம் அடித்த 115 ரன்களே இங்கு பதிவான மிகக் குறைந்த ஸ்கோராகும்.
வான்கடே மைதானத்தில் இந்தியா மற்றும் இலங்கையின் செயல்திறன்
இந்தியா இங்கு விளையாடிய 20 போட்டிகளில் பங்கேற்றுள்ளது. அதில் 11 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளனர். மார்ச் 2023இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா இங்கு விளையாடிய கடைசிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மறுபுறம், இலங்கை கிரிக்கெட் அணியை பொறுத்தவரை, வான்கடே மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றியும், 3 போட்டிகளில் தோல்வியையும் பெற்றுள்ளது. இலங்கை அணி கடைசியாக 2011இல் இங்கு விளையாடியது. இதற்கிடையே தனிநபர் ஸ்கோரை பொறுத்தவரை 2023ல் குயின்டன் டி காக் 174 ரன்கள் எடுத்ததே ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது. அதேபோல், 2007ல் முரளி கார்த்திக் 6 விக்கெட் வீழ்த்தியது ஒரு பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சு புள்ளிவிபரமாக உள்ளது.