INDvsSL 2வது ODI : தோல்வியைத் தழுவியது இந்தியா; தொடரில் முன்னிலை பெற்றது இலங்கை
ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதேசா மைதானத்தில் இந்தியா vs இலங்கை இடையே நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியைத் தழுவியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா, முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தாலும், அடுத்தடுத்து வந்தவர்களில் அக்சர் படேல் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 42.2 ஓவர்களிலேயே 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 0-1 என பின்தங்கியுள்ளது.
இந்தியாவின் 18 வருட ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது இலங்கை கிரிக்கெட் அணி
இலங்கை கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் வென்றதன் மூலம், தொடரை 1-0 என கைப்பற்றியுள்ளது. இந்தியா vs இலங்கை இடையேயான இரு தரப்பு தொடர்களில் 2006க்கு பிறகு, இந்திய அணியால் இலங்கைக்கு எதிராக தொடரை வெல்ல முடியாமல் போவது இதுவே முதல் முறையாகும். 2006இல் நடக்கவிருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், அந்த தொடர் 0-0 என முடிக்கப்பட்டது. இதற்கிடையே, 1997க்கு பிறகு இந்திய அணி ஒரு ஒருநாள் தொடரை கூட இலங்கை அணியிடம் இழக்கவில்லை எனும் நிலையில், இந்த தொடரின் எஞ்சிய ஒரு போட்டியிலும் தோல்வியைத் தழுவினால், 27 ஆண்டுகால சாதனையும் முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு மைதானத்தில் இந்தியாவின் மோசமான சாதனை
ஒருநாள் இன்னிங்சில் ஒரு அணிக்கு எதிராக ஸ்பின்னர்களிடம் அதிக விக்கெட்டுகளை இழந்த நான்காவது மோசமான போட்டியாக இந்தியாவுக்கு இது பதிவாகியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ஸ்பின்னர்களிடம் அதிக விக்கெட்டுகளை இழந்த முதல் 4 மோசமான ஆட்டங்களும் இலங்கைக்கு எதிராக இதே கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடந்தவைதான். 2023இல் 10 விக்கெட்டுகளையும், 1997 மற்றும் தற்போதைய தொடரின் இரண்டு போட்டிகளில் தலா 9 விக்கெட்டுகள் என நான்கு முறை இங்கு இந்தியா ஸ்பின்னர்களிடம் விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது. இதற்கிடையே, இலங்கை அணியின் ஸ்பின்னர் ஜெஃப்ரி வாண்டர்சே, ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு அணியின் முதல் ஆறு விக்கெட்டுகளையும் கைப்பற்றிய முதல் ஸ்பின்னர் என்ற சாதனையை இதில் படைத்துள்ளார்.