INDvsPAK : பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா; தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற்றம்
அகமதாபாத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடந்த ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்தியா அபார வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக, போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து பேட்டிங்கைத் தொடங்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டரின் சொதப்பலான பேட்டிங்கால் 191 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் அதிகபட்சமாக 50 ரன்களும், முகமது ரிஸ்வான் 49 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஷர்துல் தாக்கூரை தவிர, பந்துவீசிய மற்ற ஐந்து பந்துவீச்சாளர்களும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் அரைசதம்
192 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் மற்றும் விராட் கோலி தலா 16 ரன்களில் அவுட்டாகி வெளியேறினாலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா ஷ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து அணியை வெற்றியை நோக்கி வழிநடத்தினர். ரோஹித் ஷர்மா அபாரமாக பேட்டிங் செய்து 86 ரன்கள் குவித்து அவுட்டான நிலையில், ஷ்ரேயாஸ் அரைசதம் கடந்து 53 ரன்களுடன் கடைசி வரை அவுட்டாகாமல் கேஎல் ராகுலுடன் சேர்ந்து இலக்கை எட்டி வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மேலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைக் கைப்பற்றியது.