INDvsNZ Semifinal : 2019இல் இரண்டு நாட்கள் நடந்த இந்தியா vs நியூசிலாந்து அரையிறுதி; பின்னணி என்ன?
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்று முடிந்து முதல் அரையிறுதி நவம்பர் 15இல் இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக, முந்தைய 2019 ஒருநாள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியிலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், அந்த தோல்விக்கு பழிக்கு பழி வாங்க இந்திய அணி தயாராகி வரும் நிலையில், 2019 அரையிறுதி போட்டி இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சுவாரஸ்ய பின்னணியை இதில் பார்க்கலாம். இங்கிலாந்தின் மான்செஸ்டரில் ஜூலை 9 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கியது.
மழையால் இரண்டாம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டி
கேன் வில்லியம்சன் (67) மற்றும் ரோஸ் டெய்லரின் (74) அபார ஆட்டத்தால், தொடக்கத்தில் நல்ல ரன் குவித்தாலும், மிடில் ஆர்டரின் சொதப்பல் பேட்டிங்கால் இறுதியில் 239 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் 47வது ஓவர் வீசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மழை தொடர்ந்து பெய்ததால் போட்டியை மீண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த நாள் விட்ட இடத்தில் இருந்து போட்டி மீண்டும் தொடங்கிய நிலையில், வானிலை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதமாக இருந்தது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் அடுத்தடுத்து சரிவை சந்திக்க, தோனியும் ஜடேஜாவும் கடைசி வரை போராடியும் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியைத் தழுவியது.