INDvsNZ 3வது டெஸ்ட்: முதல் நாள் முடிவில் 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து களமிறங்கியது. அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்டர்களில் டெவோன் கான்வே 4 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களிலும் வெளியேறிய நிலையில், கேப்டன் டாம் லாதம் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த வில் யங் மற்றும் டேரில் மிட்செல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மீட்டனர். இதில் வில் யங் 71 ரன்களும், டேரில் மிட்செல் 82 ரன்களும் எடுத்தனர்.
இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்
எனினும், மற்ற வீரர்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், நியூசிலாந்து அணி முதல் நாளிலேயே 235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இதில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தரும் இதில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களுடன் களத்தில் உள்ளது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் அவுட்டான நிலையில், ஷுப்மன் கில் 31 ரன்களுடனும் ரிஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.