INDvsENG : அபார வெற்றி; ஒருநாள் உலகக்கோப்பையில் 20 ஆண்டு சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா
ஒருநாள் உலகக்கோப்பை 2023 லீக் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) நடைபெற்ற 29வது ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. முன்னதாக போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச முடிவு செய்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் ஷர்மா அபாரமாக விளையாடி 87 ரன்கள் குவித்தாலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தனர். ஓரளவு நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் 49 ரன்களும், கேஎல் ராகுல் 39 ரன்களும் எடுத்தனர். இதனால் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அபாரம்
230 ரன்கள் இலக்குடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணி களமிறங்கிய நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஐந்தாவது ஓவரில் டேவிட் மாலன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார். தொடர்ந்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜானி பேர்ஸ்டோவை முகமது ஷமி வெளியேற்ற 10வது ஓவரில் 39 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறியது. அடுத்தடுத்து வந்த இங்கிலாந்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 129 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதற்கிடையே, இந்த வெற்றியின் மூலம் 2003க்கு பிறகு முதல் முறையாக ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை இந்தியா வீழ்த்தியுள்ளது.