வங்கதேச அணிக்கு எதிரான டி20 வெற்றியில் இதுதான் டாப்; புதிய சாதனை படைத்தது இந்திய அணி
ஹைதராபாத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஒரு பரபரப்பான பேட்டிங் செயல்திறன் மற்றும் பின்னர் சிறப்பான பந்துவீச்சு ஆகியவற்றின் மூலம், இந்தியா 133 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வாரிச் சுருட்டினர். இதன் மூலம் டி20 போட்டிகளில் வங்கதேசத்துக்கு எதிராக ரன்களின் அடிப்படையில் எந்தவொரு அணியும் பெற்ற மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன்னர், 2022 டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதே, வங்கதேசத்திற்கு எதிரான முந்தைய மிகப்பெரிய வெற்றியாக இருந்தது.
வங்கதேசத்திற்கு எதிராக ரன் வித்தியாசத்தில் டாப் 5 மிகப்பெரிய வெற்றிகள்
மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்தியா ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் 133 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து 2022இல் தென்னாப்பிரிக்கா 104 ரன்கள் வித்தியாசத்தில் எடுத்த வெற்றி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில், 2008இல் பாகிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிராக 103 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி உள்ளது. அடுத்து நான்காவது இடத்தில், இந்த தொடரின் முந்தைய போட்டியில் டெல்லி மைதானத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி உள்ளது. கடைசியாக, ஐந்தாவது இடத்தில் 2017இல் தென்னாப்பிரிக்கா 83 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் டாப் 5 இடங்களில் 4 இடங்களை ஆக்கிரமித்துள்ளது.