INDvsBAN முதல் டெஸ்ட்: பும்ராவின் அபார பந்துவீச்சால் 149 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் இன்னிங்ஸில் வங்கதேச கிரிக்கெட் அணி 149 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முன்னதாக, இந்தியா முதல் இன்னிங்ஸில் ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம், ரவீந்திர ஜடேஜா மற்றும் யஷஸ்வி ஜெய்சவாலின் அரைசதங்கள் மூலம் 376 ரன்கள் குவித்திருந்தது. இதையடுத்து, போட்டியின் இரண்டாம் நாளில் (செப்டம்பர் 20) தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். அந்த அணியில் எந்தவொரு பேட்ஸ்மேனும் 40 ரன்களைக் கூட தொட முடியவில்லை. அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா அசத்தல் பந்துவீச்சு
வங்கதேசத்திற்கு எதிராக முதல் பந்தை வீசிய இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பவுலர் ஜஸ்ப்ரீத் பும்ரா முதல் ஓவரிலேயே ஷத்மன் இஸ்லாமை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்தார். மேலும், ஒன்பதாவது ஓவரில் இளம் வீரர் ஆகாஷ் தீப் முதல் மற்றும் இரண்டு பந்துகளில் தொடர்ச்சியான 2 விக்கெட்டுகளை வீழ்த்த வங்கதேச அணி திணற ஆரம்பித்தது. அடுத்தடுத்து இந்திய பந்துவீச்சார்கள் சிறப்பாக பந்துவீசிய நிலையில், 47.1 ஓவர்களில் 149 ரன்களுக்கு வங்கதேசம் ஆட்டமிழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இதையடுத்து, 227 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது.