மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் வெற்றி; பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
மல்யுத்த வீரர் அமன் ஷெராவத் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக ஆறாவது பதக்கத்தை வென்றுள்ளார். வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 9) நடைபெற்ற ஆடவருக்கான 57 கிலோ மல்யுத்தத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில், போர்ட்டோ ரிக்கோவின் டேரியன் டோய் குரூஸை முறியடித்து அமன் ஷெராவத் பதக்கம் வென்றார். பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தனது அபார செயல்திறன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த அமன் ஷெராவத், காலிறுதியில் அல்பேனியாவின் அபகரோவ் ஜெலிம்கானை வீழ்த்தினார். எனினும், வியாழன் அன்று நடந்த அரையிறுதிப் போட்டியில் அமன் ஷெராவத் ஜப்பானின் ரெய் ஹிகுச்சியிடம் தோற்ற நிலையில், தற்போது வெண்கலத்தை வென்றுள்ளார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
யார் இந்த அமன் செராவத்?
ஜூலை 16, 2003 இல் பிறந்த அமன் ஷெராவத், இந்தியாவின் ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் சாதனையிலிருந்து உத்வேகம் பெற்ற அமன் ஷெராவத், 10 வயதில் டெல்லியில் மல்யுத்தத்தை தொடங்கினார். 2018 மற்றும் 2019'இல் உலக கேடட் சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற அமன், 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் வெண்கலம் வென்றார். 2024இல் பிஷ்கெக்கில் நடைபெற்ற ஆசிய மல்யுத்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வென்று பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்ற அமன் ஷெராவத், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் ஒரே ஆண் மல்யுத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.