ஐசிசி தரவரிசையில் முன்னேறிய இந்திய வீரர்கள், இப்போது எந்த இடம்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் நிறைவடைந்த 2026 டி20 உலகக் கோப்பை தொடரில், இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று வரலாறு படைத்தது. இந்தத் தொடரில் இந்திய பேட்டர்களின் அதிரடியான ஆட்டம், தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலிலும் எதிரொலித்துள்ளது. 'தொடர் நாயகன்' (Player of the Tournament) விருதை வென்ற சஞ்சு சாம்சன், தரவரிசையில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார். ஐந்து போட்டிகளில் 321 ரன்களைக் குவித்த அவர், தற்போது தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 22ம் இடத்தைப் பிடித்திருக்கிறார். முக்கியமான போட்டிகளில் அவர் வெளிப்படுத்திய முதிர்ச்சியான ஆட்டம் அவருக்கு அதிக புள்ளிகளைப் பெற்றுத் தந்துள்ளது.
டி20
தரவரிசையில் முன்னேறிய மற்ற வீரர்கள்
அபிஷேக் ஷர்மா எந்த மாற்றமும் இன்றி முதலிடத்தில் அப்படியே தொடர்கிறார். நான்காம் இடத்தில் இருந்து வந்த இஷான் கிஷன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறார். சில போட்டிகளில் சரியாக ஆடாததால் சூர்யகுமார் யாதவ் இரண்டு இடங்கள் பின்தள்ளி ஒன்பதாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். திலக் வர்மாவும் ஆறாம் இடத்தில் இருந்து ஏழாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். தற்போது டாப் 10 பட்டியலில் நான்கு இந்திய வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களுடன் தென்னாப்பிரிக்கா, இலங்கை, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த தலா ஒரு வீரரும், இங்கிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேரும் முதல் 10 இடங்களில் உள்ளனர்.
கிரிக்கெட்
பவுலர்கள் மற்றும் ஆல்-ரவுண்டர்கள்
இந்திய அணியின் உண்மையான நாயகனான பும்ரா ஒரு இடம் முன்னேறி ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார். தொடர் முழுவதும் முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்ட அக்சர் பட்டேல் 6 இடங்கள் முன்னேறி 17ம் இடத்தைப் பிடித்துள்ளார். வருண் சக்கரவர்த்தில் முதலிடத்தில் இருந்து இரண்டாம் இடத்திற்கும், அர்ஷ்தீப் சிங் மூன்று இடங்கள் கீழே 16ம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர். ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா இரண்டாம் இடத்திலும், அக்சர் பட்டேல் 20ம் இடத்திலும் நீடிக்கின்றனர். ஷிவம் துபே இரண்டு இடங்கள் கீழே சென்று 11ம் இடத்தைப் பெற்றுள்ளார். அபிஷேக் ஷர்மா சில விக்கெட்டுகள் வீழ்த்தியதன் காரணமாக 6 இடங்கள் முன்னேறி 24ம் இடத்தைப் பிடித்துள்ளார்.