ஆசிய விளையாட்டுப் போட்டி : ஆடவர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் சனிக்க்கிழமை (அக்டோபர் 7) நடைபெற்ற ஆடவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதிய இந்த போட்டி மழையால் தாமதமாக தொடங்கியது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதையடுத்து ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் இந்திய பந்துவீச்சில் அடுத்தடுத்து சரிந்த நிலையில், 4 ஓவர்கள் முடிவதற்குள் 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஷஹீதுல்லா கமால் - குல்பதின் நைப் பொறுப்பான ஆட்டம்
அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும், ஷஹீதுல்லா கமால் பொறுப்புடன் நிலைத்து நின்று அணியை மீட்டெடுத்தார். 11வது ஓவரில் அவருடன் இணைந்த கேப்டன் குல்பதின் நைப்பும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் உயர ஆரம்பித்தது. 18.2 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் நடத்தப்பட முடியாமல் போனதால், தரவரிசையில் முன்னிலையில் உள்ள இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி தங்கம் வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.