ஒலிம்பிக் போட்டிக்கு தயாராக இந்திய அரசு எனக்கு ஆதரவளிக்கவில்லை: வினேஷ் போகட் குமுறல்
பாரிஸ் ஒலிம்பிக்கில் தான் சந்தித்த பிரச்சனைகளின் போது தனக்கு போதுமான ஆதரவு கிடைக்கவில்லை என்று வினேஷ் போகட் கூறினார். 30 வயதான வினேஷ் போகட் மல்யுத்தத்தில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கத்தை வெல்லும் பயணத்தில் முன்னேறிய நிலையில், கூடுதல் எடை காரணமாக ஒலிம்பிக் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். எனினும், வினேஷ் தனது வெள்ளிப் பதக்கத்தைத் தக்கவைக்குமாறு முறையிட்டார். ஆனால் விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் அவரது மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்திய ஒலிம்பிக் சங்கமும் இந்த முடிவுக்கு பதிலளித்து, வினேஷ் விவகாரத்தில் சட்டப்பூர்வ உதவியை நாடப்போவதாக கூறியது.
நிர்வாகத்தை சாடிய வினேஷ்
இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, வினேஷ் போகட் இறுதி போட்டிக்கு முன்னேறும் வரை அவரை யாருமே தொடர்பு கொள்ளவுமில்லை, உற்சாகப்படுத்தவும் இல்லை என்கிறார். "நான் இறுதிப் போட்டிக்கு வருவதற்கு முன்பு வரை, எனக்கு எந்த அழைப்பும் யாரிடமிருந்தும் வரவில்லை. அதன்பிறகு, அவர்கள் என்னை ஆதரிப்பதாக எனக்கு அழைப்பு வந்தது, ஆனால் நான் பொதுக் காட்சியாக மாற விரும்பவில்லை. அவர்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அவர்கள் என்னை தனியாக அழைத்து, 'நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்' என்று கூறியிருக்கலாம், அது எனக்கு இன்னும் அதிக ஆதரவாக இருந்திருக்கும்," என்று கூறினார். இந்திய அரசு தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், ஒலிம்பிக் கோல்ட் குவெஸ்ட் மூலம் தான் தனக்கு உதவி கிடைத்தது என்றும் வினேஷ் குற்றம் சாட்டினார்.
IOA பற்றி வருந்திய வினேஷ்
ஒலிம்பிக் போட்டியின் போது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, தனது அனுமதியின்றி படங்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதாகவும் வினேஷ் கூறியுள்ளார். "சக விளையாட்டு வீரர்களாக, அவர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு எங்களுடன் நிற்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். நான் அரை மயக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவர்கள் என் அனுமதியின்றி என்னைப் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனர், உண்மையில் எதுவும் சரியாக இல்லாதபோது நான் நன்றாக இருப்பதாகக் கூறினர்" என வருத்தம் தெரிவித்தார்.
மத்திய அரசு தனக்கு உதவவில்லை
மத்திய அரசும் தனக்கு உதவவில்லை என்கிறார் வினேஷ். "அவர்கள் உண்மையில் எனக்கு என்ன வசதிகளை வழங்கினர் என்று நான் கேட்க விரும்புகிறேன்? எனக்கு பயிற்சியாளர் கொடுத்தது யார்? எனக்கு ஒரு பயிற்சியாளர் கூட அரசு வழங்கவில்லை. இவை அனைத்தும் OGQ போன்ற தனியார் ஸ்பான்சர்களிடமிருந்து வந்தது". "அவர்கள் பயிற்சியாளர், பிசியோவை வழங்கினர் மற்றும் அனைத்து நிதிகளையும் கையாண்டனர். அரசாங்கம் பொய் சொல்கிறது," என்று வினேஷ் மேலும் கூறினார்.