விராட் கோலி கேப்டனாக இருந்திருந்தால் உலகக்கோப்பை இந்தியா வசம் : பாக். முன்னாள் கேப்டன்
வரும் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய அணிகளின் செயல்பாடு குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் கவலை தெரிவித்துள்ளார். சிறந்த சர்வதேச அணிகளாக இவை இருந்தாலும், மிக மோசமான பவர்-ஹிட்டிங் திறன்களுடன் போட்டியில் போராட நேரிடும் என்று லத்தீப் கூறியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பைக்கு இந்திய கிரிக்கெட் அணி சரியாகத் தயாராகவில்லை என்றும், விராட் கோலி அணியின் தலைமைப் பொறுப்பில் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என்றும் லத்தீப் கூறினார். இது குறித்து, கிரிக்கெட் பாஸ் யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தின் போது, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையில் புதுமையான உத்திகளை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பதாக லத்தீப் எடுத்துரைத்தார்.
ரவி சாஸ்திரி - விராட் கோலி காம்பினேஷனை புகழ்ந்த ரஷீத் லத்தீப்
ரவி சாஸ்திரி தலைமை பயிற்சியாளராகவும், விராட் கோலி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் இருந்த காலத்தில் சவுரவ் கங்குலியின் கேப்டன்சி பாணி இருந்ததாக ரஷீத் லத்தீப் கூறினார். மேலும், விராட் கோலி கேப்டனாக தொடர்ந்திருந்தால், இந்திய அணி இந்நேரம் உலகக்கோப்பைக்கு 100 சதவீதம் தயாராக இருந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். ராகுல் டிராவிட்டின் கேப்டன்சி குறித்து பேசிய அவர், டிராவிட் டெஸ்ட் அணிக்கு சிறந்த தலைமை பயிற்சியாளராக இருந்தாலும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் போதுமான அளவுக்கு செயல்படவில்லை என்றார். இந்திய அணியை பொருத்தவரை மிடில் ஆர்டர் பேட்டிங், குறிப்பாக நம்பர் 4 முதல் 7 வரையிலான பேட்டிங் மோசமாக உள்ளதாக அவர் மேலும் கூறினார்.