ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் 7 பதக்கங்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகளைத் தொடர்ந்து மாற்றுத் திறனாளிகள் பங்குபெரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் நேற்று சீனாவின் ஹாங்சௌவில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் நாளான நேற்று ஆறு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் உட்பட 17 பதக்கங்களை வென்றிருந்தது இந்தியா. இரண்டாம் நாளான இன்றும் இந்திய வீரர்கள் பதக்க வேட்டையைத் தொடர்ந்து வருகின்றனர். படகோட்டுதல் மற்றும் தடகளப் போட்டிகளில் இன்று தற்போது வரை ஏழு பதக்கங்களைக் குவித்திருக்கின்றனர் இந்திய வீரர்கள். படகோட்டுதல் மூன்று பதக்கங்களையும், தடகளத்தில் நான்கு பதக்கங்களையும் வென்றிருக்கின்றனர். இந்த ஏழு பதக்கங்களுடன் மொத்தமாக 24 பதக்கங்களை வென்று ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது இந்தியா.
இந்தியா வென்ற பதக்கங்கள்:
ஆண்களுக்கான பாரா படகோட்டுதல் போட்டியின் VL2 பிரிவில் இந்திய வீரர் கஜேந்திர சிங் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார். அதேபோல், ஆண்களுக்கான பாரா படகோட்டுதல் போட்டியின் KL3 பிரிவில் மணிஷ் கவுரவ் மற்றொரு வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியிருக்கிறார். பெண்களுக்கான பாரா படகோட்டுதல் போட்டியின் KL2 பிரிவில் இந்திய வீராங்கணை பிராச்சி யாதவ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியிருக்கிறார். தடகளத்தில், பெண்களுக்கான 100மீ போட்டியின் T12 பிரிவில் சிம்ரன் வெள்ளிப் பதக்கத்தையும், பெண்களுக்கான 400மீ போட்டியின் 400மீ பிரிவில் தீப்தி ஜீவாஞ்சி தங்கப் பதக்கத்தையும் வென்றிருக்கின்றனர். மேலும் பெண்களுக்கான கிளப் த்ரோயிங் போட்டியில் எக்தா பியான் வெண்கலப் பதக்கத்தையும், ஆண்களுக்கான 400மீ போட்டியின் T64 பிரிவில் அஜய் குமார் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றியிருக்கின்றனர்.