யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது
யு19 மகளிர் கிரிக்கெட் ஆசிய கோப்பையின் தொடக்க சீஸனின் இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தை வீழ்த்தி பட்டம் வென்றது. டி20 வடிவில் நடைபெற்ற இந்த தொடரில் முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய யு19 மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை கொங்கடி த்ரிஷா அரைசதம் விளாசி 52 ரன்கள் எடுத்தார். எனினும் மற்ற வீராங்கனைகள் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியின் பார்சானா ஈஸ்மின் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
76 ரன்களுக்கு சுருண்டது வங்கதேசம்
118 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய யு19 மகளிர் வங்கதேச கிரிக்கெட் அணியில் ஜுவைரியா ஃபெர்டஸ் அதிகபட்சமாக 22 ரன்களும், ஃபஹ்மிதா சோயா 18 ரன்களும் எடுத்தனர். மற்ற எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டாத நிலையில், 18.3 ஓவர்களில் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஆயுஷி ஷுக்லா 3 விக்கெட்டுகளையும், பருணிகா சிசோடியா மற்றும் சோனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம், இந்திய அணி மகளிர் யு19 ஆசிய கோப்பையின் முதல் பட்டத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்று கைப்பற்றியது.