இரக்கமே இல்லாமல் சம்பவம் பண்ணிய இந்தியா; எட்டாவது முறையாக ஆசிய கோப்பையை வென்றது
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 17) கொழும்புவில் நடந்த ஆசிய கோப்பை 2023 இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா தனது எட்டாவது ஆசிய கோப்பையை வென்றது. முன்னதாக, டாஸ் வென்ற இலங்கை கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. மழையால் போட்டி 40 நிமிடங்கள் தாமதமாக தொடங்கியது. முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணிக்கு அதிர்ச்சி அளித்த இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுக்க, 6 ஓவர் முடிவதற்குள் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் தன் பங்கிற்கு இலங்கை பேட்ஸ்மேன்களை சிதறடித்த நிலையில், அந்த அணி 15.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்களுக்கு சுருண்டது.
6 விக்கெட் வீழ்த்திய முகமது சிராஜ்
இந்திய கிரிக்கெட் அணியில் முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரீத் பும்ரா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதையடுத்து 51 ரன்கள் எனும் இலக்குடன் பேட்டிங்கைத் தொடங்கிய இந்திய அணி யில் தொடக்க ஆட்டக்காரராக வழக்கமாக களமிறங்கும் ரோஹித் ஷர்மா ஓய்வெடுத்துக் கொண்டு இஷான் கிஷனை ஷுப்மன் கில்லுடன் இந்தியா களமிறக்கியது. இஷான் கிஷன் 23 ரன்களும், ஷுப்மன் கில் 27 ரன்களும் எடுக்க இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 6.1 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதன் மூலம் கேப்டனாக தொடர்ச்சியாக இரண்டு ஒருநாள் வடிவ ஆசிய கோப்பை பட்டங்களை வென்ற இரண்டாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.