மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டால் யாருக்கு கோப்பை? ஐசிசி விதிகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
மகளிர் ஒருநாள் உலகக்கோப்பை 2025 இறுதிப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 2) நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய்.பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இந்தியா vs தென்னாப்பிரிக்கா பலப்பரீட்சை நடைபெற உள்ளது. அரையிறுதிப் போட்டிகளில் இரு அணிகளும் அபார வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இங்கிலாந்தை வீழ்த்தித் தென்னாப்பிரிக்கா தனது முதல் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்குகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு இது முதல் உலகக்கோப்பை இறுதிப் போட்டி என்றாலும், இந்தியா 2005 மற்றும் 2017க்குப் பிறகுத் தனது மூன்றாவது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது.
மழை
மழைக்கான வாய்ப்பு
இறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் உள்ளது. வானிலை முன்னறிவிப்புகளின்படி, இன்று 25% மழைக்கு வாய்ப்பு உள்ளது. இரவு 8 மணி வரை மழைக்கான வாய்ப்பு 20% இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆட்டத்தில் குறுக்கீடு ஏற்படலாம். மழை குறுக்கிட்டாலும் நியாயமான முடிவை உறுதி செய்வதற்காக, ஐசிசி ஏற்கனவே விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, இறுதிப் போட்டிக்கு நவம்பர் 3, திங்கட்கிழமை, ஒரு ரிசர்வ் நாளாக ஒதுக்கப்பட்டுள்ளது.
விதிகள்
ஐசிசி விதிகள்
முதலில், ஓவர்களைக் குறைத்தாவது அன்றைய தினமே ஆட்டத்தை முடிக்க அதிகாரிகள் முயற்சி செய்வார்கள். ஓவர் குறைப்புக்குப் பின் ஆட்டம் தடைபட்டால், ரிசர்வ் நாளில் அதே புள்ளியிலிருந்து போட்டி தொடரும். ஆனால், எந்த ஆட்டமும் நடைபெறாமல் தடைபட்டால், ரிசர்வ் நாளில் மீண்டும் 50 ஓவர் போட்டியாகவே தொடங்கும். ஒரு முடிவு அறிவிக்கப்பட, இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்களாவது பேட்டிங் செய்திருக்க வேண்டும். ரிசர்வ் நாளிலும் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால், இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் 2025 மகளிர் கிரிக்கெட் ஒருநாள் உலகக்கோப்பையின் இணைச் சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு, கோப்பையைப் பகிர்ந்து கொள்வார்கள்.