இந்தியா vs தென்னாப்பிரிக்கா 2வது T20I : முன்னோட்டம் மற்றும் புள்ளிவிபரங்கள்
இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டம் கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) நடைபெற உள்ளது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த முதல் டி20 போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்புடன் உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டு வலுவாக உள்ளது. மறுபுறம் தென்னாப்பிரிக்க அணியில் லுங்கி என்கிடி வெளியேற்றப்பட்டதால் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது. இதனால் ஐடென் மார்க்ரம் மற்றும் டேவிட் மில்லர் போன்றவர்கள் மீது அதிக சுமை உள்ளது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா போட்டி விவரம்
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 12) இந்திய நேரப்படி இரவு 08.30 மணிக்கு இந்திய கிரிக்கெட் அணி மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டியில் மோத உள்ளன. போட்டி கியூபெர்ஹாவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பூங்காவில் நடைபெற உள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் போட்டியை நேரலையில் கண்டுகளிக்கலாம். இரு அணிகளும் இதுவரை 25 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இந்தியா 13 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் முடிவில்லாமல் முடிந்துள்ளன.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா பிட்ச் மற்றும் வானிலை அறிக்கை
மைதானத்தில் சராசரி ரன் 145 ஆக இருப்பதால், இந்த போட்டியில் அதிக ரன் குவிக்க முடியாது என கருதப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது. இதற்கிடையியே, போட்டி நடைபெறும் சமயம் முழுவதும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகங்களும் சூழும் என கணிக்கப்பட்டுள்ளதால், போட்டி நடைபெற்றாலும், இருண்ட வானிலையே நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மழையால் 2வது டி20 கிரிக்கெட் போட்டி முழுமையாக ரத்து செய்யப்பட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை என்ற நிலைமையே தற்போது நிலவுகிறது.
இந்தியா vs தென்னாப்பிரிக்கா எதிர்பார்க்கப்படும் விளையாடும் லெவன்
இந்திய கிரிக்கெட் அணி (எதிர்பாக்கப்படும் விளையாடும் XI) : யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, முகேஷ் குமார், ரவி பிஷ்னோய், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி (எதிர்பாக்கப்படும் விளையாடும் XI) : ரீசா ஹென்ட்ரிக்ஸ், மேத்யூ ப்ரீட்ஸ்கே, ஐடென் மார்க்ரம் (கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டியன் ஸ்டப்ஸ், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், லிசாட் வில்லியம்ஸ், தப்ரைஸ் ஷம்சி.