டி20 உலக கோப்பை: ஐசிசி குழுவுடன் பேச்சுவார்த்தை நிறைவு; 3 நிபந்தனைகளை விதித்த பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாட போவதில்லை என்ற பாகிஸ்தான் அரசின் அறிவிப்பால் பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இதனை தீர்க்க ஐசிசி (ICC) தூதுக்குழு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) தலைவர் மொஹ்சின் நக்வியை லாகூரில் சந்தித்து பேசியது. இந்த பேச்சுவார்த்தையில், போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தரப்பில் மூன்று முக்கிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.
நிபந்தனை
பாகிஸ்தானின் 3 நிபந்தனைகள்
அந்த செய்தியின்படி, ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் கவாஜா தலைமையிலான குழுவுடனான சந்திப்பில், மொஹ்சின் நக்வி பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்: 1. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்கப்படும் வருடாந்திர நிதியை ஐசிசி அதிகரிக்க வேண்டும். 2. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை மீண்டும் தொடங்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டும். 3. இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கி (Handshake) விளையாட்டுத் தர்மத்தை பேண வேண்டும்.
கோரிக்கை
பின்னணி மற்றும் கோரிக்கை
இந்தியாவுக்கு செல்ல மறுத்த வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, இந்தியாவுடனான லீக் போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அறிவித்தது. இதற்கு ஐசிசி கடும் கண்டனம் தெரிவித்ததோடு, போட்டியை புறக்கணித்தால் புள்ளி இழப்பு மற்றும் அபராதம் போன்ற கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தது. தொடர்ந்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்கு நிதி உதவி மற்றும் 2028-ம் ஆண்டு 19 வயதிற்குட்பட்டோருக்கான உலக கோப்பையை நடத்தும் உரிமையையும் கோரியுள்ளார்.
இறுதி முடிவு
இறுதி முடிவு எப்போது?
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நிபந்தனைகளை விதித்தாலும், இறுதி முடிவை அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தான் எடுக்க வேண்டும். மொஹ்சின் நக்வி அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் பிரதமரை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். ஒருவேளை பாகிஸ்தான் பங்கேற்காவிட்டால், ஐசிசி விதிகளின்படி இந்தியாவுக்கு 'வாக்கோவர்' (Walkover) முறையில் வெற்றி வழங்கப்பட்டு 2 புள்ளிகள் அளிக்கப்படும்.