ஆசிய கோப்பை IND vs PAK சூப்பர் 4 : சச்சின் மற்றும் கங்குலியின் சாதனையை முறியடிப்பாரா ரோஹித் ஷர்மா?
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10இல் பாகிஸ்தானை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் ரோஹித் ஷர்மா 78 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் மைல்கல்லை வேகமாக எட்டிய இரண்டாவது வீரர் எனும் சாதனையை பெறுவார். 10,000 ரன்களை வேகமாக எட்டிய இந்தியர்கள் பட்டியலில் விராட் கோலி 205 இன்னிங்ஸ்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில், 259 இன்னிங்ஸ்களுடன் சச்சின் டெண்டுல்கர் இரண்டாவது இடத்திலும், 263 இன்னிங்ஸ்களுடன் சவுரவ் கங்குலி மூன்றாவது இடத்திலும் உள்ளனர். மறுபுறம், ரோஹித் ஷர்மா இந்தியாவுக்காக இதுவரை 239 ஒருநாள் இன்னிங்ஸ்களை மட்டுமே விளையாடி, 10,000 ரன்களுக்கு 78 ரன்கள் மட்டுமே குறைவாக உள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் ஷர்மாவின் செயல்திறன்
தற்போதைய இந்திய அணியில், பாகிஸ்தானுக்கு எதிராக 731 ரன்களுடன் ரோஹித் ஷர்மா அதிக ரன்கள் குவித்தவராக உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில், அவர் 9 இன்னிங்ஸ்களில் 5 ஐம்பது பிளஸ் ஸ்கோர்களை அடித்துள்ளார் மற்றும் 4 முறை அவர் 20 ரன்களைக் கடக்கத் தவறியுள்ளார். மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி 5 இன்னிங்ஸ்களில், சோபிக்கத் தவறிய இரண்டு முறையும் அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளரால் வீழ்ந்தார். ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மா கடந்த 2 ஆண்டுகளில் முதல் 10 ஓவர்களில் ஆக்ரோஷமாக ரன் குவித்துள்ளார். இதற்கிடையே, ஆசிய கோப்பையின் முந்தைய லீக் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் பேட்டிங் தோல்வியைத் தழுவிய நிலையில், இந்த முறை சிறப்பாக செயல்பட தயாராகி வருகின்றனர்.