ஒருநாள் உலகக்கோப்பை 2023 : இந்தியா-பாகிஸ்தான் போட்டி அட்டவணையை மாற்ற திட்டம்
இந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானை அக்டோபர் 15ல் எதிர்கொள்ள உள்ளது. இதற்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதி செய்து ஏற்கனவே வெளியிட்டுள்ள நிலையில், போட்டி அட்டவணையில் மாற்றங்கள் இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, இந்தியா-பாகிஸ்தான் மோதும் அக்டோபர் 15ல் போட்டியை மாற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 15ல் நவராத்திரி விழாவின் முதல் நாளாகும். இந்த நாளில் இரவு முழுவதும் கர்பா நடனத்துடன் கொண்டாடுவது குஜராத்தில் வழக்கமாக உள்ளது. இதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஆட்டத்தை மாற்றுமாறு பிசிசிஐக்கு பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள பிசிசிஐ
பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதை பிசிசிஐ வட்டாரங்களும் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இதுகுறித்து பிசிசிஐயின் உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்திய-பாகிஸ்தான் மோதல் குறித்து முடிவெடுக்க, வியாழனன்று (ஜூலை 27) டெல்லியில் போட்டியை நடத்தும் அனைத்து மைதான நிர்வாகிகளின் அவசர கூட்டத்திற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அழைப்பு விடுத்துள்ளதாகவும், இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி வேறு தினத்திற்கு அல்லது வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டால், அது அகமதாபாத்தில் ஹோட்டல் அறைகளை முன்பதிவு செய்துள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு ரசிகர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஒருநாள் உலகக்கோப்பையில் நான்கு குழு ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் 19 அன்று இறுதிப்போட்டியும் இங்கு நடத்தப்பட உள்ளது.