இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி! தொடரில் முன்னிலை பெற்றது!
முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது. டாஸ் வென்று பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்திய அணி ரோஹித் சர்மாவின் சதம் மற்றும் ஜடேஜா, அக்சர் படேலின் அரைசதங்கள் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் 223 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டோட் முர்பி ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்தியா vs ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் முக்கிய புள்ளி விபரங்கள்
கடைசியாக 2021 இல் டெஸ்ட் சதம் அடித்த ரோஹித், நாக்பூரில் நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஒன்பதாவது டெஸ்ட் சதத்தை எட்டினார். மேலும் இதன் மூலம் கேப்டனாக அனைத்து வடிவங்களிலும் சதம் அடித்த நான்காவது பேட்டர் ஆனார் ரோஹித். கடைசியாக ஜூலை 2022 இல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஜடேஜா, சிறப்பான கம்பேக்கை கொடுத்து 5+ விக்கெட்டுகள் மற்றும் 50+ ரன்கள் எடுத்தார். அக்சர் படேல் 174 பந்துகளில் 84 ரன்களை குவித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது இரண்டாவது அரைசதத்தை பதிவு செய்தார். அஸ்வின் தனது டெஸ்டில் தனது 31வது ஐந்து விக்கெட்டை பெற்றார். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ஹர்பஜன் சிங்கை (95) முறியடித்து, இப்போது இரண்டாவது அதிக விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.