ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுவரை இல்லாத அளவிற்கு வீரர்களை அனுப்பும் இந்தியா
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இதுவரை இல்லாத அளவுக்கு 634 விளையாட்டு வீரர்களை இந்தியா அனுப்ப உள்ளது. முன்னதாக, கடந்த 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு 572 வீரர்களை அனுப்பிய நிலையில், இந்தமுறை அதைவிட அதிக வீரர்களை அனுப்புவதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இந்த விளையாட்டுப் போட்டிக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் 850 விளையாட்டு வீரர்களை பரிந்துரை செய்தது. அதிலிருந்து 634 வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தடகளப் போட்டிகளில் 34 ஆடவர் மற்றும் 31 மகளிர் என மொத்தமாக 65 தடகள வீரர்கள் கொண்ட பெரும் அணியுடன் இந்தியா களமிறங்குகிறது.
குழு விளையாட்டுகளில் இந்திய வீரர்கள்
கால்பந்து விளையாட்டில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 28 வீரர்களுடன் மொத்தம் 44 கால்பந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டில் முதல் முறையாக இந்திய அணி களமிறங்க உள்ள நிலையில், ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டில் தலா 15 வீரர்கள் என 30 பேர் பங்கேற்கின்றனர். இதே போல் ஹாக்கியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா 18 வீரர்கள் என மொத்தமாக 36 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பளு தூக்குதல், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால் மற்றும் ரக்பி ஆகியவற்றில் எந்த ஆண் தடகள வீரருக்கும் அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை. இதற்கிடையே, மொத்தமாக பட்டியலில் இடம்பிடித்துள்ள 38 விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த காலவரிசையைப் பகிரவும்