டேவிஸ் கோப்பை 2027 தகுதிச்சுற்று: இந்தியாவில் கனடாவை எதிர்கொள்ளும் இந்தியா; புதிய கேப்டன் லியாண்டர் பயஸ் அல்லது போபண்ணா?
செய்தி முன்னோட்டம்
இத்தாலியின் போலோக்னா நகரில் இன்று நடைபெற்ற 2027 டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்று முதல் சுற்றுக்கான குலுக்கலில் உலகத் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள பலம் வாய்ந்த கனடா அணியை இந்தியா எதிர்கொள்ள உள்ளது. வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி 5 முதல் 7-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள இந்தப் போட்டியில் சொந்த மண்ணில் விளையாடும் சாதகத்தை இந்தியா பெற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் தென் கொரியாவிடம் அடைந்த தோல்வியிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்புடன் இந்திய ஆடவர் டென்னிஸ் அணி களமிறங்க உள்ளது.
இரண்டாவது முறை
2017-க்குப் பிறகு இரண்டாவது முறையாக நேருக்கு நேர் மோதும் இந்தியா மற்றும் கனடா
டேவிஸ் கோப்பை வரலாற்றில் இந்தியாவும் கனடாவும் இதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன.
கடந்த 2017 செப்டம்பரில் கனடாவின் எட்மண்டன் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் இந்தியா 2க்கு 3 என்ற கணக்கில் போராடித் தோல்வியடைந்த நிலையில் தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
உலகத் தரவரிசையில் 21-வது இடத்தில் உள்ள இந்தியாவுக்கு எதிராகக் களமிறங்கும் கனடா அணியில் ஃபெலிக்ஸ் ஆகர் அலியாசிம் லியாம் டிராக்ஸல் மற்றும் அலெக்சிஸ் கலார்னோ ஆகிய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தகுதிச்சுற்றுக்கான வாய்ப்பு
பெஸ்ட் ஆஃப் ஃபைவ் வடிவமும் செப்டம்பர் இரண்டாவது தகுதிச்சுற்றுக்கான வாய்ப்பும்
வழக்கமான பெஸ்ட் ஆஃப் ஃபைவ் முறையில் நடைபெற உள்ள இந்தப் போட்டியின் முதல் நாளில் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களும் இரண்டாம் நாளில் ஒரு இரட்டையர் ஆட்டம் மற்றும் இரண்டு ஒற்றையர் ஆட்டங்களும் நடைபெறும்.
போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் ஆடுகளத்தின் தன்மை மற்றும் தேதியைத் தேர்வு செய்யும் உரிமை இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சுற்றில் வெற்றி பெறும் அணி வரும் 2027 செப்டம்பர் 17 முதல் 19 வரை நடைபெற உள்ள இரண்டாவது தகுதிச்சுற்றுக்கு முன்னேறி இறுதி எட்டு அணிகள் சுற்றுக்கு அருகில் செல்லும்.
ரோஹித் ராஜ்பால் பதவிக்காலம்
ரோஹித் ராஜ்பால் பதவிக்காலம் முடிவடைவதால் லியாண்டர் பயஸ், ரோஹன் போபண்ணாவுக்கு வாய்ப்பு
கனடாவுக்கு எதிரான இந்தப் போட்டி இந்திய டென்னிஸ் அணியில் ஒரு முக்கியத் தலைமை மாற்றத்திற்கும் வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய கேப்டன் ரோஹித் ராஜ்பாலின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் பதவி நீட்டிப்பு கோர மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் இந்திய டென்னிஸ் ஜாம்பவான்களான லியாண்டர் பயஸ் மற்றும் ரோஹன் போபண்ணா ஆகியோரில் ஒருவர் கனடாவுக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.