வரலாற்றில் இரண்டாவது மோசமான தோல்வி; இந்திய கிரிக்கெட் அணியின் சோகம்
செய்தி முன்னோட்டம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணிக்குக் கிடைத்த 124 ரன்கள் என்ற எளிய இலக்கைத் துரத்த முடியாமல் வெறும் 93 ரன்களுக்குச் சுருண்டு, 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்டத் தொடரில் தென்னாப்பிரிக்கா 1-0 என முன்னிலை பெற்று, புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. காயமடைந்த கேப்டன் ஷுப்மன் கில் இல்லாமல் களம் இறங்கிய இந்திய அணிக்கு, இந்தத் தோல்வி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈடன் கார்டன்ஸ் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு சவாலாக இருந்தது.
அரைசதம்
ஒரே ஒரு வீரர் மட்டுமே அரைசதம்
நான்கு இன்னிங்ஸிலும் சேர்த்து வெறும் 594 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்ட இப்போட்டியில், தெம்பா பவுமாவின் ஆட்டமிழக்காத 55 ரன்கள் மட்டுமே ஒரே அரை சதமாக இருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், தென்னாப்பிரிக்கா 93/7 என்ற நிலையில் இருந்ததால், இந்தியா வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், கேப்டன் பவுமா மற்றும் கார்பின் போஷ் ஆகியோரின் 44 ரன்கள் பார்ட்னர்ஷிப், தென்னாப்பிரிக்காவின் இலக்கை 150ஐக் கடக்க உதவியது. 124 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் (0), கே.எல். ராகுல் (1) என ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.
குறைந்த இலக்கு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா துரத்தத் தவறிய மிகக் குறைந்த இலக்குகள்
வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் போராடிய போதும், தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மர் மீண்டும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச் செய்தார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா துரத்தத் தவறிய இரண்டாவது மிகக் குறைந்த இலக்காக இது பதிவாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் 1997 இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் 120 ரன்களை எட்ட முடியாத போட்டி உள்ளது. மூன்றாவது இடத்தில் 2024 இல் மும்பை வான்கடே மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக எடுத்த 147 ரன்கள் உள்ளது.