CT 2025: ஐசிசி இறுதிப்போட்டிகளில் 13 முறை விளையாடியுள்ள இந்திய அணியின் பெர்பார்மன்ஸ் எப்படி?
செய்தி முன்னோட்டம்
இந்தியா vs நியூசிலாந்து இடையேயான 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரு அணிகளும் மதிப்புமிக்க சாம்பியன்ஸ் டிராபி பட்டத்தை வெல்லும் நம்பிக்கையுடன் இருப்பதால், இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபியை இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே இரண்டு முறை வென்றுள்ளது. 2002 இல் இறுதிப்போட்டி ரத்தானதால் இலங்கையுடன் கோப்பையை பகிர்ந்து கொண்டது.
பின்னர் 2013 இல் கோப்பையை வென்றது. மேலும், தற்போது மூன்றாவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில், ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் செயல்திறன் குறித்து இதில் பார்க்கலாம்.
இறுதிப்போட்டி
ஐசிசி இறுதிப்போட்டிகளில் இந்திய அணியின் செயல்திறன்
இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபியில், ஐந்தாவது முறையாக தற்போது இறுதிப்போட்டியை எட்டியுள்ளது.
மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2013இல் கோப்பை வென்ற பிறகு, 2017இல் விராட் கோலி தலைமையிலும் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தது.
ஒட்டுமொத்தமாக 13 முறை ஐசிசி இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 5 முறை மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
7 போட்டிகளில் தோல்வியைப் பெற்ற நிலையில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்துள்ளது. இதற்கிடையே, நியூசிலாந்து கிரிக்கெட் அணி இதுவரை ஆறு ஐசிசி இறுதிப் போட்டிகளில் விளையாடியுள்ளது.
அதில் இரண்டில் வென்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2000 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என இரண்டிலும், இந்தியாவை வீழ்த்தியே வெற்றி பெற்றுள்ளது.