'இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனமானது' : முன்னாள் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல்
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த ஆண்டில் ஆசிய கோப்பை மற்றும் ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை என பல சந்தர்ப்பங்களில் ஒருவரையொருவர் எதிர்கொள்ள உள்ளன. இரு அணிகளுக்கிடையே இருதரப்பு போட்டிகள் எதுவும் நடக்காததால், பன்னாட்டு தொடர்களில் நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது உற்சாகமும் சலசலப்பும் உச்சத்தில் உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் விளையாட்டுகள் எப்போதுமே பாகிஸ்தானின் பந்துவீச்சுக்கு எதிராக இந்தியாவின் பேட்டிங்கைப் பற்றியதாகவே இருக்கும். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பேட்டிங்கிலும் தன்னை முன்னேற்றியுள்ளது. குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பை சிறந்த உதாரணம். ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் 4 இடங்களில் கேப்டன் உட்பட மூன்று பேட்டர்கள் இருப்பதால் பாபர் அசாம் தலைமையிலான அணியை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
பாகிஸ்தான் முன்னாள் பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் பேட்டி
மேலே குறிப்பிட்ட காரணங்களை எடுத்துக்காட்டி, இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பலவீனமாக இருப்பதாகவும், இது பாகிஸ்தானுக்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருக்காது என்றும் பாகிஸ்தான் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல், நாதிர் அலி போட்காஸ்டில் பேசியபோது கூறியுள்ளார். கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையில் நடந்ததைப் போல ஜஸ்பிரித் பும்ரா ஒருநாள் உலகக்கோப்பைக்கும் உடல் தகுதி பெறவில்லை என்றால், இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு நேரிடும் என்று அஜ்மல் மேலும் கூறினார். மேலும், "இந்தியாவின் பேட்டிங் எப்பொழுதும் வலுவாக உள்ளது. எங்கள் பந்துவீச்சு ஆபத்தானது என்பதால் இது சமமானவர்களின் போராக இருக்கும். இப்போதைக்கு, பாகிஸ்தானுக்கு 60% வெற்றி வாய்ப்பு இருப்பதாக நான் கூறுவேன்." என்று கூறினார்.