LOADING...
INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
INDvsSA ஒருநாள் தொடருக்கான கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு

INDvsSA ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல்.ராகுல் நியமனம்; இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ

எழுதியவர் Sekar Chinnappan
Nov 23, 2025
07:08 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா vs தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஷுப்மன் கில் விலகியதைத் தொடர்ந்து, இந்தத் தொடரில் கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். முந்தைய ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெறாத ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணிக்குத் திரும்பி உள்ளார். அவர் 2025 சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். அதேசமயம், வழக்கமான கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இந்தத் தொடரில் இடம்பெறவில்லை. மேலும், அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் ஐயரும் விலகி உள்ளார்.

பும்ராவுக்கு ஓய்வு

வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு

பிஸியான சர்வதேச அட்டவணையைக் கருத்தில் கொண்டு, நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடைசியாக 2024 ஆகஸ்ட் மாதம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். துருவ் ஜூரலும் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நவம்பர் 30, டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 6 ஆகிய தேதிகளில் ராஞ்சி, ராய்ப்பூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 9ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீரர்கள்

இந்திய அணி விளையாட்டு வீரர்களின் பட்டியல்

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, கே.எல்.ராகுல் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜூரல்.