உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல் : இந்தியாவின் வெற்றிக்கு பிந்தைய மாற்றம்!
நாக்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) 2021-23 சுழற்சியில் இந்தியா தனது புள்ளிகளின் சதவீதத்தை (பிசிடி) 61.67 ஆக உயர்த்தியுள்ளது. இந்த சுழற்சியில் தனது இரண்டாவது தோல்வியை சனிக்கிழமை (பிப்ரவரி 11) பதிவு செய்த ஆஸ்திரேலியா, 70.83 என்ற பிசிடியுடன் இன்னும் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0, 3-0, அல்லது 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக நேரடியாக இந்தியா தகுதி பெறும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இதர போட்டிகள் ஏற்படுத்தும் தாக்கம்
ஸ்போர்ட்ஸ்டாரின் கூற்றுப்படி, ஆஸ்திரேலியா அடுத்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு டிரா அல்லது வெற்றியைப் பதிவு செய்யத் தவறினால், அது இலங்கையை இறுதிப் போட்டிக்கு வர அனுமதிக்கும். ஆனால் 53.33% பிசிடியுடன், அட்டவணையில் மூன்றாவது இடத்தில் உள்ள இலங்கை, நியூசிலாந்தில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடறில் இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால் தான் அது சாத்தியமாகும். இலங்கையை தவிர இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்புள்ள இதர ஒரே அணி தென்னாப்பிரிக்கா மட்டுமேயாகும். இலங்கையை போலவே, தென்னாப்பிரிக்காவும் தங்கள் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றால், இதர அணிகளின் முடிவுகளை பொறுத்து இறுதிப்போட்டிக்குள் நுழைய வாய்ப்புண்டு. ஜூன் 7 முதல் 11 வரை லண்டன் ஓவல் மைதானத்தில் இறுதிப்போட்டி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.